திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன். இவரது மனைவி பிரியா. இவர்களின் மகள் சஷ்டிகா (17). அங்குள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தரையில் அமர்ந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்புறமாக வைக்க கூடிய மிகவும் கடினமான துவி பாத சிரசாசனத்தில், சென்னையை சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் கடந்தாண்டு 15 நிமிடங்கள் நின்று உலக சாதனை படைத்தார்.
புதிய சாதனை படைத்த மாணவி
அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக மேற்கொண்ட தீவிர பயிற்சியின் விளைவாக மாணவி சஷ்டிகா துவி பாத சிரசாசனத்தில் தொடர்ந்து 27 நிமிடங்கள் நின்று சென்னை மாணவரின் உலக சாதனைய முறியடித்து புதிய உலக சாதனை படைத்தார். அவரது சாதனை, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’, ‘ஆவ்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து யோகாவில் உலக சாதனை படைத்த மாணவி சஷ்டிகா, அவருக்கு பயிற்சி அளித்த பயிற்றுநர் சந்தியா ஆகியோரை, அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தொடர்ந்து உலக சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யோகாசனம் மூலம் உலக சாதனை புரிந்த சிறுவர், சிறுமியர்கள்