திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி எல்லாம்பேட்டை. சிற்றூராட்சியான இங்கு பல்வேறு வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட, அருந்ததியர் சமூதாய மக்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாலையில் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் இன மூதாட்டி ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாததால், குடும்பத்தினர் அவரை வழக்கமாக பயன்படுத்தி வரும் பாதை வழியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்பி வீடு திரும்பியுள்ளனர். அப்போது, அக்கிராமத்திலுள்ள உயர் சாதியினர், அவர்களை தடுத்து நிறுத்தி, சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அம்மக்களை ஊருக்குள் வரக்கூடாது என்றும், செருப்பு அணியக் கூடாது எனவும் மிரட்டி, அவர்கள் பயன்படுத்தி வந்த பாதையின் குறுக்கே முள்வேலியை போட்டு அடைத்துள்ளனர். இதனால் அருந்ததியர் இன மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், "வயதானவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய போது, இந்த வழியாக நீங்கள் செல்லக் கூடாது எனக் கூறி மர வேர் முட்களைப் போட்டு சாலையை மறித்தனர். நான்கு தலைமுறைகளாக எங்கள் மூதாதையர்கள் இங்கு வசித்தும், இந்த வழியை தான் பயன்படுத்தியும் வந்தனர். இந்த பாதை வழியாக நாங்கள் நடப்பதற்கு, 6 அடி இடம் கொடுக்கப்பட்டதாக எங்களுடைய முன்னோர்கள் தெரிவித்திருந்தனர். அந்த வழியை, சாலை அருகே உள்ள இரண்டு வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து, நடந்து செல்ல மட்டுமே வழி விட்டிருந்தனர். இப்பொழுது அந்த வழியும் எங்களுடையது கிடையாது என்று பாதையை முழுவதுமாக மூடியுள்ளனர். இதனால் கடைவீதிக்கு கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியதா இருக்கு" என்றார்.
இந்த சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எங்களுக்கு நடக்கச் சாலை அமைத்து தந்தும், இந்தப் பிரச்னையை முழுவதுமாக தீர்க்கவும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் சென்னைக்கு அருகிலேயே, சாதிய பாகுபாடு மேலோங்கி நிற்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நிவர்' கரையை கடந்தும் மக்களின் துயரம் கடக்கவில்லை... தேங்கி நிற்கும் மழைநீரால் அவதிப்படும் செம்மஞ்சேரி