திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சந்தை மிகவும் பெயர் பெற்றதாகும். அதில் காய்கறிகள், பழங்கள், மளிகை, மீன், இறைச்சி, பேன்ஸி ஸ்டோர், கவரிங் நகைகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் மட்டும் செயல்படுகின்றன. இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் சிலர் அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனைச் செய்வதாக புகார்கள் எழுந்தன.
அந்தப் புகாரை அடுத்து அங்கு விரைந்த அலுவலர்கள், ஒவ்வொரு கடையிலும் விசாரணை நடத்தினர். அதில் பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் செந்தில், பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், லைட்ஹவுஸ் ஊராட்சி மன்ற தலைவர் கஜேந்திரன், பெரும்புலம் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல், வருவாய் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அதையடுத்து அதிக விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: திருமங்கலம் காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைபிடிக்காத மக்கள்!