திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் புதுமவிலங்கை ஊராட்சி முதல் சத்திரை ஊராட்சி வரை விளைநிலங்கள் வழியாக கால்நடைகள் மற்றும் விளை பொருள்களை கொண்டுச் செல்வதற்கு சுமார் இரண்டு கிலோ மீட்டர் வண்டிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இப்பாதையை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனால் வண்டிபாதை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களின் விலை பொருள்களை கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், பாதிப்படைந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலர், நில நிர்வாக ஆணையர், திருவள்ளூர் கோட்டாட்சியர், திருவள்ளூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அனுப்பிவந்தனர்.
மனுக்களின் அடிப்படையில் விசாரணை செய்து கோரிக்கைகளின் உண்மைத் தன்மையை அறிந்த திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, கடந்த பிரவரி 26ஆம் தேதியன்று புதுமாவிலங்கை கிராமத்திலிருந்து சத்திர வரையில் செல்லும் வண்டிப்பாதை புல.எண்: 189A, 201, 210 மற்றும் 218 வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைத்து தருமாறு திருவள்ளூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் பிரச்னைக்குரிய இடத்தை திருவள்ளூர் வட்டாட்சியர் விஜயகுமாரி, துணை வட்டாட்சியர் வெங்கடேஷ், தலைமை நில அளவையர் செந்தில் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் புதுமவிலங்கை முதல் சத்திரை வரை, விவசாய நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை காவல்துறை பாதுகாப்புடன் மீட்டனர். பின்னர், அந்த நிலம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதில் ஒரு வழி சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
ஆனால், கரோனா தாக்கத்தின் காரணமாக மக்களை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினால் சாலை அமைப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வண்டி பாதையை மீண்டும் ஆக்கிரமித்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த கரோனா காலத்தில் பசியோடும் பட்டினியோடும் உள்ள ஏழை மக்களை காக்க 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை வைத்துள்ள விவசாயிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வண்டி பாதையை அமைத்துத் தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.