திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருத்தணி நகராட்சி மலை சார்ந்த பகுதி என்பதால் நிலத்தடி நீர்மட்டம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் திருத்தணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.பி. நரசிம்மனின் கோரிக்கையை ஏற்று ரூ.109.68 கோடி மதிப்பீட்டில், பாலாற்றின் திருபாற்கடல் பகுதியிலிருந்து நீர் உறிஞ்சி, கிணறுகள் அமைத்து, 86 கிலோமீட்டர் தூரம் பகிர்மான குழாய்கள் அமைத்து நகர மக்களுக்கு தினமும் 10 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இத்திட்டப்பணிகளை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
அதே நேரத்தில் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பிஎம் நரசிம்மன், அரசு அலுவலர்கள் காணொலி காட்சி நிகழ்வில் பங்கேற்று திருத்தணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்கி வைத்தனர்.