திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றார்.
இதனையடுத்து வழக்கம் போல் இன்று காலை கடையை திறப்பதற்காக வந்த தினேஷ், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு கடைக்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது விலை உயர்ந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்ஃபோன்கள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் காவல் துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால் சிசிடிவி ஆன் செய்யப்படாமல் இருந்ததால் கொள்ளையர்கள் தொடர்பான எந்த காட்சியும் பதிவாகவில்லை. இதனால், கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து துப்பு துலக்குவதில் காவல் துறையினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் தங்க நகைகள், 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடைபெற்றுள்ள இந்த கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.