திருவள்ளூர் மாவட்டம், அருமந்தை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு குடும்பம் ஒன்றிற்கு குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால் அங்குள்ள அலுவலர்கள் 100நாட்கள் வேலை வழங்காமல் ஏழு நாட்கள் மட்டுமே வேலை வழங்கி நிதியை கையாடல் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் வேலை வழங்காததால் விரக்தியடைந்த கிராம மக்கள் இன்று அருமந்தை கூட்டுசாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.