திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்தும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட தலைமைக் கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே. பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், வருவாய்த் துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தலைமை கண்காணிப்பு அலுவலருக்கு எடுத்துரைத்தார். பின்னர் பேசிய மாவட்ட தலைமை கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே. பிரபாகர், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முதல்நிலை மீட்புக் குழுவினரை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், மழை வெள்ளம் செல்லக் கூடிய தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளையும் புயல் பாதுகாப்பு மையங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் அவர் உத்தரவிட்டார்.
கடலோர மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்காக வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், 2015ஆம் ஆண்டு பெய்த மழை வெள்ளத்தின்போது போக்குவரத்து தடை செய்யப்பட்ட சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நாராயணபுரம் தரைப்பாலம் பட்டறைபெரும்புதூர் பாலம் உள்ளிட்ட பல பணிகளை ஆய்வு செய்து பயணிக்கத் தகுதியான நிலையில் உள்ளதா என்று அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.