தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பால், உணவுப் பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் இயங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் 15 சரக்கு வாகனங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. பெரும்பாலான சரக்கு வாகனங்கள் இயக்கப்படாததால், அதன் உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.
மேலும் டீசல் விலை, வாகன உதிரி பாகங்களின் விலை ஏற்றதாலும் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலை வரி, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் வாகனங்களுக்கான கடன் தவணையை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் திருவள்ளூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அத்தியாவசிய பொருள்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு கரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் இருப்பதால் அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும், வருவாயின்றி தவித்து வரும் ஓட்டுநர்களுக்கு சிறப்பு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் ஒன்றிய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோன்று தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நல சங்கம் சார்பிலும் சாலை வரி, சுங்க கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், வாகன கடன் தவணை செலுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.