திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி பகுதியில் அமைந்துள்ளது நியமம் கிராமம். நியமம், குத்தம்பாக்கம் ஆகிய இரண்டு ஊராட்சிகளிலும் முழுக்க முழுக்க விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்துவருகிறது.
இந்தப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான குளிர்பான தொழிற்சாலை ஒன்று கடந்த 25 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலங்களில் விவசாயம் செய்வதற்கு நீர் இல்லாமல், குடிநீர் பஞ்சம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பின் காரணமாக குளிர்பான தொழிற்சாலை மூடப்பட்டதால், கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குடிநீர் சுவையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், குளிர்பான தொழிற்சாலைக்காக அதிக நீர் சுரண்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனோடு, இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை, வாசனை திரவியங்கள் அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போது, நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளதால், இதனை எதிர்த்து நியமம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூவிருந்தவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்தனர்.
இதையும் படிங்க: நாய் கடித்து உயிருக்கு ஊசலாடிய நாகப்பாம்பு: அறுவை சிகிச்சை வெற்றி!