திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று முன்தினம் நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மீது அளப்பெரிய அன்புகொண்ட நகர செயலாளர் பூபதி தனக்குச் சொந்தமான இடத்தில் அவருக்கு சிலை எழுப்ப ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
இந்தப் பணியை அதிமுகவைச் சேர்ந்தவரும் நகராட்சி அலுவலருமான ராஜலட்சுமி தடுக்க முற்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த திருத்தணி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் திமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக தள்ளிவைத்தனர்.
மேலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் இதே இடத்தில் சிலை அமைக்க அனுமதி வழங்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் திமுகவினர் எச்சரித்தனர்.