திருவள்ளூர்: புதூர் மேடு காலனியைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார் - லாவண்யா (25) தம்பதி. லாவண்யா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் புதூர் கிராமத்தில் நேற்று (செப். 29) கரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நள்ளிரவில் லாவண்யாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பட்டரைபெரும்புதூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் லாவண்யாவுக்கு மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரது கணவர், உறவினர்கள் லாவண்யாவை திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் லாவண்யாவை பரிசோதனை செய்துவிட்டு உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான் லாவண்யா உயிரிழந்தார் என அவரது தந்தை விஜயகுமார் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், லாவண்யாவின் உறவினர்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் - சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு