தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை, 18 சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதி கண்ணபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் வாக்குப்பதிவு மையம் 195ஆவது வார்டில் மாதிரி வாக்குப்பதிவின்போது பதிவான 38 வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் மறுவாக்குப்பதிவிற்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் மறுத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்தது.
இதனைத் தொடர்ந்து இன்று மறுவாக்குப்பதிவு காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்துவருகின்றனர். இந்நிலையில் மறு வாக்குப்பதிவு மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 11 மணி நிலவரப்படி 26 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இந்தத் தேர்தல் நடைபெற காரணமானவர்கள் மீதும் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.