திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகரில் குடிசை மாற்று வாரியத்திற்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
இதில் கிராம நத்தம் எனப்படும் வருவாய்த் துறையினருக்குச் சொந்தமான இடத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவந்த 50 குடும்பங்களின் வீடுகளை இடிக்க நீதிமன்றம் விதித்தத் தடை ஆணையையும் மீறி அலுவலர்கள் அந்த வீடுகளை இடித்துத் தள்ளினர். இதனால் மாற்று இடமின்றி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமனின் வீட்டை முற்றுகையிட்டு மாற்று வீட்டுமனை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி மிரட்டியதால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பலராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் பாதிக்கப்பட்டவர்களை தனது உதவியாளர்கள் மூலம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு, வீட்டுமனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.