திருவள்ளூர் மாவட்டம் போரூர் அடுத்த தெள்ளியார் அகரம், தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (37), பெயிண்டராக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி அஸ்வினி (28). இவர்களுக்கு பிரதீப் (4), சக்திவேல் (2) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகனான பிரதீப்புக்கு வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும் இருந்து வந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவருக்கு பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் இளைய மகனான சக்திவேலுக்கு 2 வயது ஆகியும் பேச முடியாமல் இருந்து வந்தது குறித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவருக்கும் வாய் பேச முடியாது, காது கேட்க முடியாத குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இதனை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தனது இரண்டு மகன்களுக்கும் வாய் பேச முடியாமலும், காது கேட்காமலும் இருப்பதைக் கண்டு சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் அஸ்வினி.
இந்நிலையில், நேற்று மூத்தமகன் பிரதீப்பை அவரது பாட்டி வீட்டிற்கு கணவருடன் அஸ்வினி அனுப்பிவைத்துள்ளார். இதையடுத்து மகேஷ் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த் போது வீட்டின் கதவு நீண்ட நேரம் தட்டியும் திறக்காமல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஜன்னலைத் திறந்து பார்த்தபோது அஸ்வினி தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அஸ்வினி இறந்து கிடந்தார். பின்னர் கட்டிலில் பார்த்தபோது அவரது இளைய மகன் சக்திவேலும் இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து போரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை செய்துவருகின்றனர்.
மேலும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டு வயது மகனை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.