திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு அனுமதி பெற்று குளிர்சாதன மதுபானகூடம் ஒன்று இயங்கிவருகிறது. இந்த பாரில் அரக்கோணத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் காசாளராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி வழக்கம்போல பாலாஜி, சக ஊழியர்களுடன் பாரில் பணியில் இருந்தார்.
அப்போது பாருக்கு காரில் அடையாளம் தெரியாத ஏழு பேர் வந்து மது அருந்தியுள்ளனர். அவர்கள் குடிபோதையில் பாரில் மது வகைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக குற்றம்சாட்டி அங்கிருந்த பணியாளர்களை மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் பாலாஜியை தகாத வார்த்தைகளால் பேசி, அவர் தலையிலும் கையிலும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். பின் பாரிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு உடனடியாக அவர்கள் வந்த காரில் தப்பிச் சென்றனர்.
பலத்த காயமடைந்த பாலாஜியை உடனிருந்த பணியாளர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரின் கையில் ஆறு தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
நடந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், பாரின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.