திருவள்ளூர்: சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அருமந்தை கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவராக பட்டியலினத் தலைவர் விக்ரமன் என்பவர் தற்போது உள்ளார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து துணைத்தலைவர் உள்ளிட்ட சிலர் ஊராட்சிக்கூட்டம் நடைபெறும்போதெல்லாம் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், அவ்வப்போது கொலை முயற்சி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுவரையில், அவ்வாறு 2 முறை அவர் வாகனத்தில் செல்லும்போது கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சில நபர்கள் அளித்த பொய்ப்புகாரின்பேரில், சுதந்திர தினத்தன்று கொடியேற்றி விட்டு திரும்பியபோது, 30க்கும் மேற்பட்ட காவலர்கள் அவரை சுற்றி வளைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் காவல் நிலையத்திற்குச்சென்ற ஊராட்சி மன்றத்தலைவர், தற்போது வரை எங்கு சென்றார்? என காணவில்லை என்று ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அருமருந்தை கிராம மக்கள் புகாரளித்தனர்.
இந்நிலையில், ’சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தங்களைப் பெண்கள் என்றும் பாராமல், அவள்.. இவள்.. என ஒருமையில் தரக்குறைவாகப் பேசி அவமதிப்பதாகவும் அத்துடன் பொய் வழக்குப்போட்டு பணம் பெற்றுக்கொண்டு சாதி ரீதியாக தங்களை தொந்தரவு செய்து வருவதாகவும்’ அருமருந்தை கிராமப் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
மேலும், ’காணாமல்போன ஊராட்சி மன்றத்தலைவரை எந்த ஆபத்தும் இன்றி கண்டுபிடித்துத்தரவேண்டும்’ என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவது மன ரீதியான கொடுமை... கேரள உயர்நீதிமன்றம்