திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த கிாரமத்தி்ல் மனித உடலுறுப்புக் கழிவுகள், மருத்துவ ஆய்வகக் கழிவுகள், மருத்துவ ரசாயனக் கழிவுகள் ஆகியவை இயந்திரங்கள் மூலம் எரியூட்டி அழிக்கும் பயோ மெடிக்கல் வேஸ்ட் சிஸ்டம்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே மெய்யூர் கிராமத்தில் அந்த தனியார் தொழிற்சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
இங்கு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ள பகுதியைச் சுற்றிலும் ஏரி மற்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா கால்வாய் மற்றும் வன விலங்குகள் மேய்ச்சல் நிலம் ஆகியவை இருப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தொழிற்சாலையை அமைக்க வேண்டாம் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.