தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக, தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. முன்னதாக கோயம்புத்தூரில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தைப் பெரியாரின் மார்பளவு வெண்கல சிலையின் முகம், கண்ணாடி ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் சிலையை சேதப்படுத்தி அவமதித்தவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த திராவிடக் கழகம், திமுக தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கந்தசஷ்டி விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!