திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பேரூராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து லட்சம் லிட்டர் திறன் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பேரூராட்சி 14 மற்றும் 15 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் காந்தி சிலை எதிரே பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் இன்று திடீரென சாலை மறியல் செய்தனர். பள்ளிப்பட்டு பேரூராட்சி வரலாற்றில் முதல்முறையாக குடிநீருக்காக இந்த சாலை மறியல் நடைபெற்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பள்ளிப்பட்டு காவல் துறையினர், பேரூராட்சி அலுவலர் (கிளார்க்) சங்கர் ஆகியோர் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் சப்ளை செய்வதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.