திருவள்ளூர்: சென்னை மக்களின் முக்கியக் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்யும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் மிக முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்
1,968 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்த்தேக்கத்தில் தற்போது 184 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. முழுக் கொள்ளளவை எட்டும்போது உபரிநீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது பூண்டி ஏரியில் உள்ள நீரின் அளவு குறைந்துள்ளதால் தமிழ்நாடு அரசு, ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக தற்பொழுது கிருஷ்ணா ஆற்றுநீர் கால்வாய் வழியாக சுமார் 280 கனஅடி நீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.
பூண்டி ஏரியில் 8, 9 மதகுகள் பழுதடைந்து நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவதால் கிருஷ்ணா ஆற்றுநீர் கால்வாயிலிருந்து வரும் 280 கனஅடி நீரை சேமிக்க முடியாமல் இணைப்புக் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டுவருகிறது.
அலட்சியப்போக்கில் பொதுப்பணித் துறையினர்
பழுதடைந்த மதகுகளைப் பழுது நீக்குகிறோம் என்ற பெயரில் பொதுப்பணித் துறையினர் மதகுகளின் அருகே ஜேசிபி உதவியுடன் குழிதோண்டி மணல் அள்ளி மதகுகளின் அருகே கொட்டிவருகின்றனர்.
ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளக் கூடாது என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்தை பொதுப்பணித் துறையினர் மீறியுள்ளனர். பூண்டி, அதைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக விரோத கும்பல் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளுவதற்குப் பொதுப்பணித் துறை வழிவகை ஏற்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை
தற்போது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் சேமித்துவைக்கப்படும் குடிநீர் சென்னை மக்களுக்கு ஜனவரி மாதம் வரை தேவைப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில்கொண்டு சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்கு முக்கிய ஆதாரமாகத் திகழும் பூண்டி ஏரியில் மதகுகள் பழுதை உடனே சரி செய்யவும், ஆற்றுப்படுகையில் மணல் எடுப்பதைத் தடுக்கவும் பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா பயணம்