சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரேனா தீநுண்மி தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால், தீவிர பொது ஊரடங்கை இன்று (ஜூன் 19) முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டியுள்ள சுமார் 40 ஊராட்சிகள், 2 நகராட்சிகள், 4 ஒன்றியப் பகுதிகளில் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதை இன்று( ஜூன் 19) முதல் மாவட்ட நிர்வாகத்தினர் அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பொது ஊரடங்கு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கூறும்போது, "தீநுண்மி பரவலைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் தாங்களாகவே சுயகட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். எந்த அவசியமும் இல்லாமல் வெளியேவரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். முகக் கவசம் அணியாமல் வரும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவசியத் தேவைகளுக்கு மக்கள் அவர்கள் வீட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு வாகனம் இல்லாமல் நடந்து செல்ல வேண்டும் எனவும்; அத்துடன் மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கே உள்ளே வர யாருக்கும் அனுமதியில்லை எனவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கூறினார்.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடைய எண்ணிக்கை அதிகமாகயிருப்பதால், இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் டிடி மருத்துவமனைக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா சாலை, காமராஜர் சாலை மூடல் - சென்னையில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்