திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நாகராஜகண்டிகை கிராமத்தில் தனியார் இரும்பு உருக்குத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுகள் காரணமாக கிராமத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தூசிகள் படிந்து காணப்படுகின்றன. நீர்நிலைகள், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையை மூடக்கோரி வீடுகளில் கருப்புக் கொடி காட்டியும், உண்ணாவிரதம் மேற்கொண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்களது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைப்பது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற திருவள்ளூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். இரும்பு உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடும்வரை, தங்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட எதையும் பயன்படுத்தப்போவதில்லை என்றும் அரசு உரிய தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.