திருவள்ளூர்: திருத்தணி நகராட்சி பொதட்டூர்பேட்டை சாலையில் உள்ளது, அனைத்து மகளிர் காவல் நிலையம். திருத்தணி தொகுதியில் உள்ள 3 லட்சம் மக்களின் ஒரே காவல் நிலையமாகவும், அனைத்து மகளிர் காவல் நிலையமாகவும் இந்த காவல் நிலையம் செயல்படுகிறது. இந்நிலையில், இந்த காவல் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
தற்போது வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்களுக்கு அமர்ந்து பெட்டிஷன் எழுதுவதற்கு ஒரு இடம் இல்லை. மேலும், இந்த காவல் நிலையத்தில் குடிதண்ணீர் வசதியும் இல்லை. குழந்தைகளுடன் வரும் பொதுமக்களுக்கு அமர்வதற்கு என இடமில்லை என புகார்கள் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல், காவல் நிலையத்தில் உள்ள கால்வாய் மீது அமர்ந்து பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இவர்களை காவலர்கள் மதிப்பதே இல்லை எனவும் புகார் கொடுக்க வரும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்து கொடுக்கவில்லை எனவும், இந்த காவல் நிலையத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ள காவல் நிலைய வாகனம் 20 வருட பழமையான வாகனம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதன் டயர்களில் கல்லை வைத்து ஆபத்தான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இவை அனைத்தையும் சரி செய்ய வேண்டிய காவல்துறை உயர் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.