திருவள்ளுர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவித்துள்ளது. கிராம ஊராட்சிகள் சார்பில் தூய்மைப் பணியை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த புட்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் லோகாம்பாள் கண்ணதாசன் மேற்பார்வையில் ஊராட்சி மன்ற பணியாளர்கள் கடந்த சில நாட்களாக ஊராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதனையொட்டி நடைபெற்ற பணியினை ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் துணைத்தலைவர் சிகாமணி, வார்டு உறுப்பினர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் அனைவரும் கைகழுவ வேண்டும் முகக் கவசம் அணிய வேண்டும் வீட்டின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் யாரும் வெளியே வரக்கூடாது போன்ற விழிப்புணர்வையும் கிராம மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.