திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த மேல்நல்லத்தூர் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்து வந்தவர் பாஸ்கர். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது அறையில் தற்கொலை செய்துகொண்டார்.
இதைத்தொடர்ந்து தனது கணவர் உயிரிழப்புக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஹரிபாபுதான் காரணம் எனக் கூறி ஊராட்சி செயலரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல்துறையினர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து ஊராட்சி மன்ற தலைவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் ஒகேனக்கல் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து, ஒகேனக்கலுக்கு விரைந்து சென்ற திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் ஹரிபாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'கேசிஆர் பிறந்தநாள் பரிசாக வழக்கறிஞர் தம்பதி கொலை!'