தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவள்ளூர் லட்சுமிபுரம் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கில் இருப்புவைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கிடங்கை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (மார்ச் 4) மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியாளருமான பொன்னையா திறந்துவைத்தார்.
மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பயன்பாடு குறித்து, பயிற்சியளிக்க கிடங்கிலிருந்த 100 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், பூந்தமல்லி, திருவொற்றியூர், ஆவடி, அம்பத்தூர், திருத்தணி, மதுரவாயில் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பயிற்சிக்கான வாக்கு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.இந்த இயந்திரங்கள் மூலம் அந்தந்தத் தொகுதிகளில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்குச் செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அலுவலர்களுக்கான பயிற்சிப் பணிகளுக்கு இடையில் அந்தந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலரின் ஏற்பாட்டில் வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது.