திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அருகே கஞ்சா, போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்த ரகசியத் தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அவ்வழியாக வந்த வாகனங்களை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு சொகுசு வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் சென்றபோது, சொகுசு வாகனமானது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விசாரணையில், ஆந்திர வனப்பகுதியிலிருந்து வெட்டி கடத்தி வரப்பட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான ஒரு டன் செம்மரக் கட்டைகள் வாகனத்தில் இருப்பது தெரியவந்தது. செங்குன்றத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சாமுவேல் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் சொகுசு வாகனத்தையும், செம்மரங்களையும் பறிமுதல் செய்து மாதர்பாக்கத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.