கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, ஆந்திர மாநிலம் சித்தூரையடுத்த நாகலாபுரத்தைச் சேர்ந்த மகேஷ்(40), காசிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை(42) ஆகிய இருவரும் கணக்குப்பிரிவில் அலுவலர்களாக பணிபுரிந்தனர்.
இந்நிறுவனம் வணிகர்கள், சிறு வியாபாரிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தது. இந்நிலையில், வட்டிக்குக் கொடுத்த பணம் சரியாக திரும்ப வரவில்லையென்று கணக்கு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்து நேரில் சென்று கணக்குப்பிரிவில் உள்ள மூத்த நிர்வாகிகள் விசாரித்தபோது, மகேஷ், அண்ணாமலை ஆகிய இருவரும் பாலவாக்கம் ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்த பூபலான்(44) என்பவருடன் இணைந்து போலி ஆவணம் தயாரித்து, போலியான பெயரில் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி, ஒரு கோடியே ஒரு லட்சத்து 92ஆயிரத்து 166 ரூபாய் கையாடல் செய்துள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் நிதி நிறுவனத்தின் மேலாளர் ராஜா புகார் செய்தார். இந்தப்புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எஸ்பி, மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கண்ணப்பனுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், ஊழியர்களான மகேஷ், அண்ணாமலை, பூபாலன் ஆகிய மூவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை; மதுரையில் சிக்கிய இருவர்!