திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை இஸ்லாம் நகரைச் சேர்ந்த தம்பதியினர் முபாரக் - சோபியா. இவர்களுக்கு பர்வேஸ் (9), ரிஷ்வந்த் (6), அசாருதீன் (3), ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் மூன்று வயது குழந்தை அசாருதீன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மாயமானார்.
சிறுது நேரத்தில் முபாரக் கைப்பேசியை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குழந்தையை கடத்தி விட்டதாகவும், ரூ. 1 கோடி கொடுத்தால் மட்டுமே குழந்தையை திரும்ப ஒப்படைப்போம் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனால் பீதியடைந்த பெற்றோர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து திருத்தணி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அவர், திருத்தணி கோட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் உஷார் படுத்தினார்.
இதையடுத்து குழந்தையின் தந்தையை செல்போனில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் எண்ணிற்கு காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். இதனால் பீதியடைந்த அடையாளம் தெரியாத கும்பல், குழந்தையை ஆர்.கே.பேட்டை அருகேவுள்ள வங்கனூர் கூட்டு சாலையில் விட்டுச் சென்றனர்.
பின்னர் குழந்தை அழுதுகொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அக்குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை கடத்தல் சம்பவத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு, கடத்தப்பட்ட இரண்டு மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரூ. 78.5 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்!