திருவள்ளூர்: ம.பொ.சி நகர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மனைவி முனியம்மாள் (வயது 65). இவர்களுக்கு மகேஷ்பாபு என்ற மகனும் லோகேஸ்வரி, தேவிகா, விஜயலட்சுமி என மூன்று மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் 4 பேருக்கும் திருமணமாகி திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக மூதாட்டி முனியம்மாளுக்கு இடுப்பு பகுதி செயலிழந்தது.
எழுந்து நடக்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக பெரிதும் சிரமப்பட்டு வருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டு முனியம்மாளின் கணவர் உயிரிழந்ததை அடுத்து, முனியம்மாளின் மகன் மகேஷ் பாபு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஏமாற்றி தனது பெயருக்கு பத்திரம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், மகள்கள் லோகேஸ்வரி, தேவிகா, விஜயலட்சுமி ஆகியோருக்கு எந்த பங்கும் மகேஷ் பாபு வழங்கவில்லை என முனியம்மாள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. தற்போது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்படும் தன்னையும் மகன் பார்த்துக் கொள்ளவில்லை என்றும் உணவளிக்காமல் தன்னையும், மூன்று மகள்களையும் நடுத்தெருவில் கையேந்தும் அளவிற்கு விட்டுவிட்டதாகவும் மூதாட்டி புகார் தெரிவித்து உள்ளார்.
கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது தொடர்பாக மகன் மீது மூதாட்டி முனியம்மாள் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருவள்ளூர் கோட்டாட்சியர் விசாரணையை மேற்கொண்டார். அப்போது மூதாட்டி முனியம்மாள், தனது மகன் தன்னை ஏமாற்றிய சொத்து பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், சொத்தின் முழு அதிகாரத்தையும் தனக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
விசாரணை மேற்கொண்ட ஆர்டிஓ, ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், மேல் நடவடிக்கைக்காக மாவட்ட ஆட்சியரை அணுகவும் என பதில் கூறி உள்ளார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று (செப். 5) மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்திப்பதற்காக மூதாட்டி முனியம்மாள், குறை தீர்க்க கூட்டம் அரங்கின் எதிரே சுவற்றில் சாய்ந்த படி படுத்து இருந்துள்ளார். இதனை வெகுநேரம் கழித்து அதிகாரிகள் பார்த்து, ஆட்சியருக்கு தகவல் அளித்து உள்ளனர். இந்த தகவலைக் கேட்டு, உடனடியாக வெளியே வந்த மாவட்ட ஆட்சியர், மூதாட்டியை பார்த்து விசாரணை நடத்தினார்.
மேலும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் வரும் 11 ஆம் தேதி விசாரணைக்கு, மூதாட்டியின் மகன் வர வேண்டும் எனவும் உத்தரவிட்டார். மேலும் மூதாட்டியின் சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து, மூதாட்டியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த சம்பவம், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மனு அளிக்க வந்தவர்களை கண் கலங்கச் செய்தது.
இதையும் படிங்க: சீமானுக்கு எதிராக வாக்குமூலம் அளித்த விஜயலட்சுமி!- நீதிபதி முன்னிலையில் ஆஜர்