திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் உள்ள மேட்டுத்தெரு புதிய காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. 72 சென்ட் பரப்பளவு கொண்ட அந்த மைதானம் அருகில் தனிநபருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. ஆனால் விளையாட்டு மைதானத்தையும் தனக்குச் சொந்தமான நிலம் என்று கூறி வேலி அமைக்க முயன்றுள்ளனர்.
மேலும், அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு அடியாட்களைக் கொண்டு தொடர்ந்து மிரட்டியும் வருவதாகக் கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களையும் வெட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் திருவள்ளூர் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.
இதனையடுத்து, நகராட்சி ஆணையர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாகவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரித்தனர்.
மேலும், இந்த பகுதியில் வாரச் சந்தை அமைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் தனிநபர் அந்த இடத்தில் வாடகை வசூலித்து வருவதாகவும் அதனையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: Sivakarthikeyan Gesture: 'டிரம்ஸ்மேனுக்காக சைகை காட்டிய சிவகார்த்திகேயன்'; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!