திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விழுதி கம் மேடு கிராமத்தில் சுதாகர் (51) என்பவருக்குச் சொந்தமான செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வாகனங்களில் செங்கற்கள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கற்கள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மதனா (18), பரிமளா (19) என்னும் பெண் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னேறி வட்டாட்சியர் மணிகண்டன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் மீஞ்சூர் காவல் துறையினர் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக கொண்டுசெல்ல முற்பட்டபோது சக தொழிலாளர்கள் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சடலங்களைக் கொண்டுசெல்ல எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அலுவலர்கள் சமரசம் செய்ததைத் தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு காவல் துறையினரால் அனுப்பிவைக்கப்பட்டது.