திருவள்ளூரில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இதில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பொதுமக்களுக்கு வழங்கினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 924 குடும்ப அட்டைதாரர்களுக்குச் சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது, "கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியே செல்ல பயந்தனர். ஆனால் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்பு அரசர்கள் ஏரி குளங்களை ஆழப்படுத்தி தண்ணீரைச் சேமித்துவைத்தனர். அவ்வாறு சேமித்துவைக்கப்பட்ட தண்ணீரும் ஓராண்டிற்குத்தான் பயன்படுத்த முடிந்தது. ஆனால் தற்போது குடிமராமத்துத் திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையால், தமிழ்நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாது.
அதிமுகவைப் பொறுத்தவரை மக்களோடு தொடர்புடைய ஒரு இயக்கம்" என்றார்.
இதையும் படிங்க: அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டம் - ஜெயக்குமார்