வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. நேற்று இரவுமுதல் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை அடைந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்கட்டமாக 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், மாலை ஆறு மணியளவில் நான்காயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது, மேலும் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்த நீரானது காவனூர், குன்றத்தூர், அடையாறு வழியாக கடலில் போய் இணைகிறது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அவ்விடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் மேற்பார்வையில் தொடர்ந்து பார்வையிட்டுவருகின்றனர்.
இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்ட நீரானது சிறிது சிறிதாக அதிகரிக்கப்படலாம் என அதிகாரப்பூர்வமற்றத் தகவல் வெளியாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் ஏழு மதகுகளும் திறக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிங்க : 22 அடியை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு!