திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தமிழ்நாடு-ஆந்திர எல்லையான நல்லாட்டூர் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலையடுத்து, திருத்தணி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்றை சோதனை செய்ததில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனால் ஓட்டுநரை கைது செய்ய முற்பட்ட காவலர்களிடம் இருந்து ஓட்டுநர் மணி என்பவர் தப்பி ஓடியுள்ளார். இதனால் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்த காவலர்கள் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
நல்லாட்டூர் கொசஸ்தலை ஆற்றில் நடைபெறும் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் இருப்பதால் காவல் துறையினர் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.