திருவள்ளூர்: திருத்தணி அருகே மத்தூர் ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தை பூசிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பள்ளியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் மத்தூர் ஊராட்சியில், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இருப்பினும் பள்ளியில் கட்டமைப்பு சரிவர இல்லாத காரணத்தினால் சாதி ரீதியிலான பல்வேறு பிரச்சினைகளை மாணவர்கள் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது அப்பள்ளி வகுப்பறை பூட்டுகளில் முகம் தெரியாத சில மர்ம நபர்கள் மலத்தை பூசிச் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று (ஆகஸ்ட். 18) வழக்கம் போல் காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியினுள் செல்லாமல் வகுப்பறை வாசலிலேயே அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
பள்ளி வகுப்பறை பூட்டுகளில் யாரோ மர்ம நபர்கள் மனித மலத்தை சிலர் பூசித் சென்றதாக தெரிகிறது. வகுப்பறை பூட்டுகளில் மனித மலத்தை பூசிச் சென்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சென்னையை உலுக்கிய பெட் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் மீண்டும் கைவரிசை!
இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "மனித கழிவுகளை பூசி மாணவர்களிடையே ஜாதி பிரச்சினைகளை ஏற்படுத்தும் நபர்கள், பள்ளியில் வகுப்பறை கட்டடங்களை உடைப்பது, கதவுகளை சேதப்படுத்துவது, தண்ணீர் தொட்டிகளை உடைப்பது, வகுப்பறைகளில் அமர்ந்து மதுபானம் அருந்துவது என பல செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனைக் கண்டித்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடமும் தெரிவித்தோம்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து மர்ம நபர்கள் சாதி மோதல்களை உருவாக்கும் வகையில் இது போல் மனித மலத்தை பூசி பிரச்சினை செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் இப்படி செய்து விட்டு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இத்தகைய செயலால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. நடந்தது என்ன?