திருவள்ளூர்: திருத்தணி அருகே அம்மா நகரும் நியாயவிலைக் கடையை அமைச்சர்கள் பா. பெஞ்சமின், மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருவாலங்காடு ஒன்றியம் கோதண்டராமபுரம் காலனியில், அம்மா நகரும் நியாயவிலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா. பெஞ்சமின், மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் பங்கேற்று, நியாய விலைக் கடை சேவையைத் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள், கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நியாயவிலைப் பொருள்கள் வாங்க நெடுந்தூரம் சென்றுவருவதால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் 906 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 108 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் மட்டும் 36 நகரம் நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் பி.எம் நரசிம்மன், முன்னாள் எம்பி கோ. அரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, ஆவின் பெருந்தலைவர் வேலஞ்சேரி த. சந்திரன் உளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நியாவிலைக் கடை கோரிக்கைகள்; முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும்