திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் அறக்கட்டளை மற்றும் அரசு பொது சுகாதார நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் க. பாண்டியராஜன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண், பல், தோல், மூட்டு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் பெற்றனர்.
மேலும் 2,000 நபர்களுக்கு கண்ணாடிகளும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான அட்டைகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேசிய அமைச்சர், உள்ளாட்சித் தேர்தல் நடத்த அதிமுக, தேர்தல் ஆணையம் பொறுத்தவரை அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் என்ற நம்பிக்கையோடு வேலை செய்துவருகிறோம்.
இந்நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் கடைசியாக திமுக ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை ஏற்கனவே தமிழ்நாடு அரசு, வட்டங்களை சீரமைத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டது. மாவட்டங்கள் பிரிப்பதால் நகராட்சி வார்டுகள் மாறாது. ஏற்கனவே செய்து முடித்த பணிகளை செய்யவில்லை என்று அறிக்கை கொடுத்து வழக்கு தொடர்வதால் நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்தார்.