திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது, திருமுல்லைவாயில் நாகம்மை நகரிலிருந்து ஆவடியின் பல்வேறு பகுதிகளுக்கு 50 செ.மீ விட்டம் கொண்ட ராட்சத குழாயில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
கடந்த புயலின் காரணமாக, அதில் ஏற்பட்ட உயர் அழுத்தத்தால் ராட்சத வால்வின் உள்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 2 லட்சம் லிட்டர் நீரானது சாலையில் வழிந்தோடியது. இதனையறிந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது உடனடியாக ராட்சத வால்வை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த அமைச்சர் நாசர் திடீரென ராட்சத வால்வு உடைந்ததை உறுதி செய்ய சாலையில் தரையோடு தரையாக படுத்து வால்வு உடைந்த பகுதியை பார்வையிட்டு, பாதிப்படைந்த இடத்தை உறுதி செய்தார். இந்த செயல் கூடியிருந்த குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் ராட்சத வால்வினை சரி செய்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நிலையில், தற்போது பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.