திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆஞ்சநேயர்புரம் அருகில், இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. இங்கு குடிநீர், மின் விளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருவதாக முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
இதனையடுத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சரை வரவேற்கும் விதமாக மேள தாளங்கள் அடித்து நடனமாடி உற்சாகமாக அப்பகுதி மக்கள் வரவேற்றனர். பின்னர் அப்பகுதியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குடிநீர் கைப்பம்பை அடித்து, தண்ணீர் பருகி இருவரும் சோதனையிட்டனர்.
தொடர்ந்து அப்பகுதியில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ”இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் மாற்று இடம் அளிக்கப்படும். அந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
அதேபோன்று கரோனா காலக்கட்டத்தில் பழங்குடியினர், ஆதி திராவிட மாணவர்களுக்கு தற்போது அப்பகுதியில் உள்ள படித்தவர்கள் மூலம் வகுப்பு எடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பிற அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஒலி வடிவிலும் பாடம்