பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கூட ’ட்ரெயின் ஸ்கூலுக்கு போகணும்’... எனக் கேட்க வைத்துள்ளது எண்ணூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த எண்ணூர் சிவகாமி நகரில் இந்தப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.
கடந்தாண்டு ஏற்பட்ட தீ விபத்தினால் இப்பள்ளியின் முகப்பு கரும்புகையின் எச்சம் போலக் காட்சியளித்தது. இதை சீரமைக்க மாநகராட்சி அலுவலர்கள் வந்து ஆய்வு செய்தனர். அந்த சமயத்தில் மாணவர்களுக்காகப் புதுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்த துணை தலைமை ஆசிரியர் வாசுகி தனது மனதில் இருந்த எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
![metro train painting on govt primary school](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-trl-01-spl-story-school-byet-vis-scr-7204867_15102020161407_1510f_02053_426.jpg)
மாணவர்கள் ஆர்வமுடன் வந்து கல்வி கற்கும் வகையில் வித்தியாசமான முறையில் பள்ளியை வடிவமைக்க வேண்டும் என அங்கிருந்த ஆசிரியர்களும் மாநகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்காகன மாதிரி வடிமாக மெட்ரோ ரயில் போன்ற வடிவத்தை தயார் செய்து காண்பித்துள்ளனர். இதற்கு ஒப்பந்ததாரர் சரவணனும் ஒப்புதல் அளித்தார்.
இதனைச் செயல்படுத்த சரவணன் அவருடைய நிதி பங்களிப்பையும் செலுத்தியுள்ளார். மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகமாக்க ஆசிரியர்களும் நிதி பங்களிப்பில் சரவணனுடன் இணைந்தனர். மெட்ரோ ரயில் வடிவில் பள்ளி கட்டடம் அமைக்கப்பட்டு புதிய வண்ணமும் பூசப்பட்டது.
அன்று துணை தலைமை ஆசிரியர் சொன்ன ஐடியா இன்று மாணவர்களையும் கவர்ந்துள்ளது. அச்சு அசலாக மெட்ரோ ரயில் போலவே இருக்கும் இப்பள்ளிச் சுவர் ஓவியத்தை வெளியூர்வாசிகள் கூட விசிட் அடித்துச் செல்கிறார்கள். இந்தப் பள்ளியை வெளியிலிருந்து பார்ப்பதற்கு, மெய்யாகவே ரயிலைப் பார்க்கும் போது ஏற்படும் பிரமிப்பு துளியும் மாறவில்லை என்கின்றனர் பெற்றோர்.
கரோனாவுக்கு பின் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இங்கு தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் நிச்சயம் புத்துணர்வு அளிக்கும் என ஆசிரியர் காயத்ரி தெரிவிக்கிறார்.
இது தவிர, வகுப்பறைகளின் உள்ளே பாடப்புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களைச் சுவர்களில் ஓவியமாக வரைந்துள்ளனர். எழுத்து வடிவமாக இல்லாமல் ஓவியமாக காண்பிக்கும்போது மாணவர்களின் கற்றல் ஆற்றல் மேம்படும் என தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.
தற்போது அங்கு பயிலும் மாணவர்கள் எப்போது பள்ளி திறக்கும் என ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளி தரமானதாக இருப்பது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' - முன்மாதிரியான முன்னாள் மாணவர்கள்...