கோடைக்கால விற்பனையில் சக்கைப்போடு போடும் பழங்களில் ஒன்று மாம்பழம். பெங்களூரா, நீலம், ருமானி, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்களுக்கு நல்ல கிராக்கி உண்டு. தித்திக்கும் இந்த மாம்பழங்களை விளைவித்த விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த கோடைக்காலத்தில் அத்தனை உவப்பானதாக இல்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் மாம்பழ சாகுபடி செய்யப்பட்டது. ஒரு ஏக்கரில் 500 மரங்கள் இருக்கும். அதில், ஒரு மரத்திற்கு 80 கிலோ முதல் 50 கிலோ வரை மாம்பழங்கள் கிடைக்கும். இந்த சீசனில் இந்த மாம்பழங்களை நம்பித்தான் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமே இருந்தது. அப்போது அவர்களுக்கு கரோனா நெருக்கடி குறித்து கிஞ்சித்தும் தெரியாது.
கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 500 ஏக்கரில் செய்யப்பட்ட மாம்பழ சாகுபடி 11ஆக குறைந்தது. கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது மாம்பழ விளைச்சல் பாதியாக குறைந்துவிட்டது. இதனால் மாம்பழங்களின் விலை கிலோ 100 ரூபாயாக உயர்ந்தது. ’இருக்கும் பொருளாதார நெருக்கடியில் யாருய்யா மாம்பழத்தை இம்புட்டு விலை கொடுத்து வாங்குவார்கள்’ என அங்கலாய்க்கிறார்கள் விவசாயிகள்.
“மாம்பழ தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்தால் ஓரளவு லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதைக் கனவாக்கிவிட்டது ஊரடங்கு. 3 லட்ச ரூபாய்க்கு இந்த தோப்பை குத்தைக்கு எடுத்தோம். ஆனால், ஊரடங்கால் 2 லட்சம் ரூபாய் வரை பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கிறோம். ஏற்கனவே விளைச்சல் இல்லை, தற்போது வாங்க ஆளில்லை. குறைவான அளவில் விளைந்த மாம்பழங்களையாவது விற்கலாம் என நினைத்தால் வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. பழுத்து தொங்கும் மாழ்பழங்களை எங்கள் கைகளாலேயே பறித்து தோட்டத்துக்கு உரமாக்குக்கிறோம்” என்கிறார் விவசாயி தர்மலிங்கம்.
இது குறித்து கோபால் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது இயலாத காரியமாகிவிட்டது. இதனால் மாம்பழங்கள் விற்காமல் தேக்கமடைந்துள்ளன. உள்ளூரில் விற்பனை செய்யும் வியாபாரிகளும் ஊரடங்கு உத்தரவால் தோட்டத்தின் பக்கமே வருவதில்லை.
சந்தைப்படுத்த முடியாத 70 விழுக்காடு மாம்பழங்களை தோட்டத்துக்கு உரமாக போட்டுவருகிறோம். இதனால் எங்கள் உழைப்பு வீணாவதுடன், பொருளாதார பின்னடைவும் ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசு எங்கள் பிரச்னையை ஆராய்ந்து தகுந்த நிவாரணம் வழங்கவேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: விற்காமல் கிடக்கும் கோரைப் பாய்கள்... பயிரை நடலாமா? வேண்டாமா? - கலங்கும் காவிரி விவசாயிகள்!