திருவள்ளூர்: கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பட்டரைபெரும்புதூர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர், அப்போதைய கூட்டுறவு சங்க தலைவர் அதிமுக நிர்வாகி சத்தியமூர்த்தி ஆகியோர் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு கடன் பெற்றுத் தருவதாக கூறி கோடிக் கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 7 வருடங்களாக வழக்கை சரியாக விசாரணை செய்யாமல் தாமதப்படுத்துவதாக கூறி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ராமச்சந்திரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த வாரமே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக பட்டரைபெரும்புதூர் ராமச்சந்திரன் கூறியிருந்த நிலையில் பட்டறைபெரும்புதூர் கிராமத்திற்கு நேரடியாக சென்ற உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: பொதுத் தேர்வுக்கு பயந்து மாணவன் தீக்குளித்து தற்கொலை