திருவள்ளூர்: திருப்பாச்சூர் பகுதியில் வசிப்பவர், மணிகண்டன். இவர் மத்திய அரசின் ஐசிஎம்ஆர் நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். மணிகண்டன் தனது மகளை சொந்த கிராமமான பழைய திருப்பாச்சூர் பகுதியில் இருந்து திருவள்ளூரில் இயங்கும் பிரபல பள்ளியில் தினந்தோறும் அழைத்துச்சென்று விட்டு, பின்னர் திருவள்ளூர் அருகே உள்ள ஐசிஎம்ஆர் பகுதிக்கு வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதுபோல் இன்றும் தனது குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு ஐ.சி.எம்.ஆர் பணிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த லாரி ஒன்று ஓரமாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் நிலை தடுமாறிய மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஐஎப்எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் உறவினர் கடத்தல் - திருவள்ளூரில் நடந்தது என்ன?
போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் லாரி அதிக புகையை வெளியிட்டு அதிக வேகத்துடன் செல்வதை வீடியோ எடுத்தபோது அதிவேகமாக சென்ற லாரி ஓரமாகச் சென்ற, இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காட்சி பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அருகே இயங்கும் குவாரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் அதிவேகமாக செல்வதும் விபத்து ஏற்படுவதும் வழக்கமாக ஒன்றாக மாறி வருகிறது. இச்சூழலில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இடித்து விட்டு, நிற்காமல் சென்ற வீடியோ வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் நகரத்திற்குள் லாரிகளை அனுமதிக்காமல் புறவழியில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இந்நிலையிலும் தற்போது திருவள்ளூர் நகரத்திற்குள்ளே லாரிகள் அதிவேகமாக இயக்கப்படும் நிலையை மாற்றி விபத்துகளைக் குறைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: தேசிய மீன் வளர்ப்போர் தினம்; பூண்டி நீர்த்தேக்கத்தில் விடப்பட்ட 2 லட்சம் மீன் குஞ்சுகள்!