திருத்தணி அடுத்த ராஜா நகரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு 1989ஆம் ஆண்டு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் பட்டா வழங்கப்பட்டது.
30 ஆண்டு காலம் ஆகியும் அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்பட்ட அத்தனை பேரும், அப்பகுதிக்குச் சென்று வீடு கட்ட முடிவு செய்தனர்.
ஆனால், அருகிலுள்ள வேறு தரப்பினர் அவர்களை அந்தப் பகுதியில் வீடு கட்டவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், அலுவலர்கள் முன்னிலையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாத காரணத்தால், நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களின் வீடுகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றியும், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தும், தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் தங்களின் இந்த கோரிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: சிங்காநல்லூர் ஹவுஸிங் யூனிட்: சிதிலமடைந்த வீடுகளைப் பார்வையிட்ட ஓபிஎஸ்!