குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் இளைஞர் ஒருவரை அடையளம் தெரியாத சிலர் சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதனைக் கண்டு திடுக்கிட்டுப்போன அப்பகுதி மக்கள் குன்றத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடம் வந்த காவல் துறையினர் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனை அனுப்பிவிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், "கொலைசெய்யப்பட்ட மதுராந்தகத்தைச் சேர்ந்த முருகன் (37), இவரது மனைவி பாண்டியம்மாளுடன் சில மாதங்களாக இந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிக்கிறார்.
இந்நிலையில், நேற்றிரவு மனைவி, பிள்ளைகளைக் காண முருகன் அந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். தந்தையைக் கண்ட குழந்தைகள் தாயை அழைத்துவர வீட்டை விட்டு வெளியேறினர்.
அப்போது, அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் அங்கு காரில் வந்துள்ளது. அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த முருகன் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை கதவின் மீது வீசி வெடிக்கச் செய்துள்ளனர். இதில், கதவு வெடித்துச் சிதறியது.
இதையடுத்து, வெளியே வந்து விழுந்த முருகனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்துவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்" எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகன் மீது மதுராந்தகம் பகுதியில் குற்ற வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாகக் கொலைசெய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? உள்ளிட்ட கோணங்களில் குன்றத்தூர் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு !