திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் உடற்பயிற்சி கூடத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செபாஸ்டின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்தார் .
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், ”தற்போதைய நிலையில் மத்திய அரசு பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அதில் விவசாயிகளுக்கான ரூ. 6000 வழங்கும் திட்டம், எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றால் பெரும்பாலானோர் பயனடைந்துவருகின்றனர். ஏழை, எளிய மக்கள் எந்தவித பயமுமின்றி சிறுதொழில் செய்வதற்கு முத்ரா கடன் வழங்கும் திட்டம் அனைத்து வங்கிகளிலும் வழங்கப்பட்டுவருகிறது.
இதுவரையில் 1 கோடியே 5 லட்சம் பேருக்கு ரூ. 23,000 கோடி வரையில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த 65 விழுக்காடு பேர் பயனடைந்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில், இளைஞர்களைத் தொழிலதிபர்களாக உருவாக்கும் திட்டம் மூலம் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 690 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 1.50 கோடி இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக மின்வசதி இல்லாத 85 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி மற்றும் தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா பல கலாசாரங்கள், மரபுகளால் உருவான நாடு: எஸ்.ஏ. போப்டே