திருவள்ளூர் அடுத்த திருவள்ளுவர் நகர் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் ரயில்வே காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும் கிட்டுமணி என்ற மகனும் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிட்டுமணி, நிறுவனத்தில் தவறி விழுந்ததில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், சந்துரு, அவரது மனைவி ஆகியோர் மகன் கிட்டுமணியை திருவண்ணாமலையிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது, பீரோவின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 60 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரொக்கமாக வைத்திருந்த 12ஆயிரம் ரூபாய் என சுமார் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடுப்போனது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாப்பேட்டை காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை கொண்டு சோதனையிட்டனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.