திருவள்ளூர் : பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன்(38) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாள்களாக வேலை எதுவும் இல்லாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கோயம்பேடு காளியம்மன் தெருவில் உள்ள மதுபான கடையில் கண்ணன் குடித்துவிட்டு போதையில் நடந்து வரும்போது அடையாளம் தெரியாத மூன்று ஆண்கள், ஒரு பெண் கண்ணனை மடக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். கண்ணன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த அடையாளம் தெரியாத நபர்கள் சம்பவ இடத்திலிருந்த செங்கற்களை எடுத்து கண்ணனின் தலையில் அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின்னர் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து கண்ணன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : இலங்கைக்கு கடத்த முயன்ற ஒன்றரை டன் கடல் அட்டை பறிமுதல் !